திறக்கக் கூடாத கதவு   1 comment

இரவின் நீளம் முழுதும்

நீடித்த பேச்சின்

ஒரு கணத்தில்

நாம்

அந்தச் சொல்லுக்கு

முந்திய சொல்லில்

வந்து

திகைத்து நின்றோம்

அது ஒரு முறை

சொல்லிவிட்டால்

திருப்பி

அழைக்க  முடியாத சொல்

ஒருமுறை திறந்துவிட்டால்

மூட முடியாத கதவு

ஒரு முறை விழுந்துவிட்டால்

எப்போதும் எழ முடியா சரிவு

ஒரு முறை

நனைந்தாலே

நம் அத்தனை செல்களையும்

கரைத்து விடும் கடல்

தடுக்கும் விலங்குகளை

உடைத்திடத் துடித்த உதடுகளை

ஊமையாக்கித்

திரும்பப் போனோம் நாம்

தத்தம் சிறைகளுக்கு

தத்தம் மௌனங்களுக்கு ..

இனி

அந்தக் கதவைத்

திறக்கும் தருணம்

நம் வாழ்வில்

வரப போவதே இல்லை

என்ற புரிதலின் பாரத்தோடு..

Posted ஒக்ரோபர் 6, 2010 by போகன் in கவிதை

இந்தக் கவிதைகளை …   1 comment

இத்தனை நாள்

உறவையும்

”இனி

நாம் நண்பர்கள்”

என்ற

ஒற்றை வார்த்தையில் முடித்தாய் நீ..

பாவம்

நீ என்ன செய்வாய்

அப்பா பார்த்த

அமெரிக்க மாப்பிள்ளையுடன்

என்னை வெகுநேரம்

எடை பார்த்தே

அந்தச் சொல்லைச்

சொல்லியிருப்பாய் .

பொழுது இறக்கும்வரை

பூங்காக்களில்

காத்துக் கிடந்த நிமிடங்களும்

படகு  மறைவில்

இட்டுக்கொண்ட

ஆவேச முத்தங்களும் கூட

யதார்த்தத்தின் வெளிச்சத்தில்

வெளிறியிருக்கக் கூடும் உனக்கு..

உன் வீட்டு மாடியில்

ஆளில்லா நாளில்

முழு நிலவின் கீழ்

சிந்தும் நிலவொளியே

ஆடையாய்க் கிடந்ததும்

அன்றிரவு

முழுவதும்

முழுவதுமாய்

நான்

உன்னை ஆண்டதும் கூட

நட்பென மாறியிருக்கலாம் உனக்கு..

விளிம்புகளற்ற

ஒரு புன்னகையுடன்

நான் கூட

அதை ஏற்றுக்  கொள்ளக் கூடும்

இருத்தலின்

இன்னொரு பாடமாய்…

ஒரு ஞானியின்

பாவனையுடன்

உனக்கு

வாழ்த்து சொல்லவும் கூடும்..

ஆனால்

கைகளில் பிசுபிசுக்கும்

குருதியுடன்

எழுதிய

இந்தக் கவிதைகளை என்ன செய்ய..

Posted செப்ரெம்பர் 24, 2010 by போகன் in கவிதை

சராசரிகளின் காதல்   3 comments

அவள் மேல்

ஒரு அவசரக் கவிதை செய்து

அவளிடமே

படிக்கக் கொடுத்தேன்.

சராசரிதான்

அப்படி ஒன்றும்

நன்றாய் இல்லை என்றாள்

இருக்கட்டும்

நீயும்

அப்படி ஒன்றும்

தேவதை  இல்லையே என்றேன்.

சராசரிகளின்

காதலுக்கு

சராசரிக் கவிதைகள்

போதாதா என்ன..

Posted செப்ரெம்பர் 9, 2010 by போகன் in கவிதை

காதல் பேருந்து   2 comments

இருபதாவது நாளாய்

அவளிடமிருந்து

அழைப்பு எதுவும் இல்லை

என்னிடமிருந்து

எந்த அழைப்பையும்

ஏற்கவும் இல்லை

பேருந்து நிறுத்தத்திலும்

அவள் இல்லை

அலுவலகத்திலும்

விடுமுறை என்பதைத்

தவிர வேறு தகவல் இல்லை

வீடும் மூடிக் கிடந்தது

அவளது அடுக்குமாடிக்

குடியிருப்பில்

அடுத்திருக்கும் சேட்டுக்கு

என் பதட்டத்தில் ஆர்வமில்லை.

கடைசியாக கடற்கரையில்

பிணக்குடன் பிரிந்தோம்

என் கோபத்தால்

நான் தொலைத்த

மற்றுமொரு வேலை

பற்றியதாய் அது இருந்தது

வழக்கமான ஒன்றுதான்

அது

வழக்கம்போல்

அவளிடம் அடுத்தநாளே

மன்னிப்பு கேட்க தயார் ஆகவே இருந்தேன்.

ஆனால் அவள் வரவே இல்லை…

அடுத்த நாளும்

அடுத்த நாளும்

அடுத்த நாளும்..

சண்டை போட்ட இடத்திலேயே

மன்னிப்பு கேட்டு

மீண்டும் பணியில் சேர்ந்தேன்

அவளுக்காகதான் அதை செய்கிறேன்

என்பதை

ஒரு கடிதமாக எழுதி வைத்தேன்.

விடுமுறை முடிந்து

திரும்புகையில் தருவதற்காக.

நடைப் பாதைக் கடைகளில்

அவளுக்கென

ஏதேதோ வாங்கிச்  சேர்த்தேன்.

சில கவிதைகளும் செய்தேன்.

அவள்

அலுவலகம்

திரும்பவேண்டிய நாளில்

சரியாக சவரம் செய்து

படிய வாரி

அவளுக்கு பிடித்த நிறத்தில்

உடை அணிந்து

பேருந்து நிறுத்தம் போனேன்.

நான் போகும் முன்பே

அவள் வந்திருந்தாள்.

ஆர்வத்துடன் விரைந்து ஓடினேன்.

அருகில் போன

பின்பே கவனித்தேன்

அவள்

வேறுமாதிரி உடை அணிந்திருந்தாள்.

அருகில் வேறு யாரோ நின்றிருந்தான்.

நிறைய நகை போட்டிருந்தாள்

அதன் நடுவில்

புதுக் கருக்குடன்

மஞ்சள் கயிறு

ஒன்று இருந்தது.

என்னை ஏறிட்டு பார்க்கவே இல்லை.

”உங்கள் பேருந்து

போய்விட்டது”

என்றார் பழக்கமானவர்.

”ஆம்”என்றேன் அயர்வாய்…

Posted செப்ரெம்பர் 2, 2010 by போகன் in கவிதை

வழக்கம்போல் ..   1 comment

வழக்கம் போல்

இந்த முறையும் காதலை

தாமதமாகவே தெரிவித்தேன்.

வழக்கம் போல்

ஒரு சீக்கிரப் பறவை

என்னை முந்தியிருந்தது.

வழக்கம் போல்

நண்பர்களாக இருப்போம்

என்று அந்தப் பெண் சொன்னாள்..

வழக்கம் போல்

காகிதச் சிரிப்புடன்

நான் வாழ்த்துக்கள் சொல்லி விலகினேன்.

வழக்கம் போல்

தள்ளாட்டத்துடன் வீடு திரும்பி

வழக்கம் போல்

ஊர் உறங்கியபின்

கண்ணீர் நனைத்து

இக்கவிதையை எழுதுகிறேன்.

எல்லாமே வழக்கம்போல்தான்…

Posted ஓகஸ்ட் 28, 2010 by போகன் in கவிதை

கூடுமரம்   3 comments

நீ

என் வாழ்வில்

திரும்பவரவே போவதில்லை

என்பதை நான் அறிவேன் .

ஆனால் அவ்விதம் நேர்ந்தால்

முன்கூட்டியே அறிவிக்க வேண்டுகிறேன்..

ஏன் எனில்

அதுவரை செய்த கவிதைகளுடனும்

ஒளித்து வைத்திருந்த

கண்நீர்த்துளிகளுடனும்

புதிய முத்தங்களுடனும்

ஊர் எல்லையில்

நாம் பிரிந்த

அதே

அரச மரத்தடியிலேயே

மீண்டும் உன்னை

சந்திக்கவிரும்புகிறேன்.

காரணம்

அவ்விதமே நிகழும் என

அம்மரத்தில் வாழும்

பறவைகளிடம்

உறுதி அளித்திருக்கிறேன்

நீ

இல்லாத காலங்களில்

என் காதலையும் தனிமையையும்

பகிர்ந்து கொண்டவை

அவைதான்..

ஒரு நாள் மாலை

இரண்டு  கவிதைகளுக்கு இடையில்

கிடைத்த இடைவெளியில்குறுக்கிட்டு

வயதின் வளையங்கள்

தந்த சலிப்புடன்

மரம் சொன்னது

காதலில் தொலைந்துபோன

எத்தனையோ பேரை

நாங்கள்  பார்த்திருக்கிறோம்

வறண்ட காலங்களில்

இங்கு சுற்றிலும்

சிதறிக் கிடக்கும்

காதலர்களின் இதயங்களின்

உதிர ஈரம

உறிஞ்சிதான்  பிழைத்திருக்கிறோம்

ஆனால்

காலத்தின் பிடியிலிருந்து

மீண்டுவந்து

மீண்டும் காதலை

ஏந்திக் கொண்டவர்

ஒருவரைக் கூடநாங்கள்

பார்த்ததில்லை..

Posted ஓகஸ்ட் 21, 2010 by போகன் in கவிதை

இன்செப்ஷன்   Leave a comment

என் கனவிலிருந்து

உன் கனவுக்குத் தாவும்போது

தவறிவிழுந்து உடைந்துவிட்ட

பிரக்ஞையின் துண்டுகளைப்

பொறுக்கிக் கொண்டிருக்கையில்தான்

இந்தத் திறப்பைக்

கண்டுபிடித்தேன்.

அது

ஒரேநேரத்தில்

சதையாலும் மயிராலும்

செய்யப் பட்டிருந்தது.

சிவந்த அதன் கதவுகளின் மேல்

காலம்-இறந்தது

என்று எழுதியிருந்தது.

அதை நான்

என் குறியால் உடைத்து

திறந்தேன்.

கருப்பைக்குள்

மீண்டும் நுழைபவன் போல்

அதன்

இருண்ட தாழ்வாரங்களில்

வழுக்கிப் போனேன்.

உச்சத்தில் துடிக்கும்

யோனியின் உதடுகள் போல்

அதன் சுவர்கள்

துடித்துக் கொண்டிருந்தன.

நெளியும்

அதன் சருமம் முழுதும்

முளைத்திருந்த அலமாரிகளில்

கண்ணாடிக் குமிழ் முலைகளுடன்

சீனக் கண்ணாடிப் பாத்திரங்கள்

தங்களுக்குள்

கிசுகிசுத்துக் கொண்டே

அமர்ந்திருந்தன.

அவற்றின்

புடைத்த வயிறு முழுக்க

பாதி வளர்ந்த

மஞ்சட் கருக்கள்

தளும்பிக் கொண்டே இருந்தன.

நான் பசி தாங்காது

அவற்றில் ஒன்றைத்

தின்னக் கேட்டேன்.

உன் கடவுச் சொல்லைச் சொல்

என்றன அவை ஆணவமாய்..

நான் யோசித்து

நான் கடவுள் என்றேன் சந்தேகமாய்..

அத்தனை சத்தமும்

உறைந்து

எல்லாம் ஒரு கணம்

அந்தரத்தில் நின்றன.

சட்டென்று

கிரீச்சிடும்  அலறலுடன்

கனவு அத்தனையும் உடைந்து

சிதறி

நான் வெளியே  விழுந்துவிட்டேன்.

என்

உடல் முழுதும்

அதன் பனிக்குடநீர்

பிசுபிசுப்பாய்ப்

படிந்திருந்தது.

பக்கத்தில் கிடந்த

சிற்றிலையில்

தவறான கடவுச்சொல்

என்று எழுதியிருந்தது.

Posted ஓகஸ்ட் 17, 2010 by போகன் in கவிதை

முடிவல்ல   Leave a comment

இந்தக் கவிதையை

நீங்கள்

படித்துமுடிக்கும்போது

நான்

இறந்து போயிருக்கலாம்.

மணம் வீசுவதில்

சலிப்புற்று

மலர் ஒன்று

உதிர்ந்திருக்கலாம்

கீழ்வானில்

ஒரு

நட்சத்திரம்

ஒளிர்வதில் களைப்புற்று

அணைந்திருக்கலாம்.

அதனால் என்ன…

இவையெல்லாம்

நிகழ்ந்த அதே கணம்

வேறொரு தோட்டத்தில்

வேறொரு அரிதான மலர்

பூத்திருக்கலாம்.

மற்றுமொரு நட்சத்திரம்

யவனத்தின் பிரகாசத்துடன்

மேல்வானில்

மினுங்கத்

தொடங்கியிருக்கலாம்.

இன்னுமொரு இடத்தில்

இன்னுமொரு மனிதன்

இன்னும் சிறந்த

ஒருகவிதையுடன்

பிறந்திருக்கலாம்.

Posted ஓகஸ்ட் 13, 2010 by போகன் in கவிதை

எல்லாம் ரசாயனம்   4 comments

காதலினால்

தாடிக்குள்

தொலைபவனைப் பார்த்து

காதல் என்ற ஒன்றே

கிடையாது

என்றான்

விஞ்ஞானி நண்பன்.

அமர காதல்கள்

அத்தனையுமே

ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்

சுரப்புகளின்றி

வேறல்ல.

எல்லாமே ரசாயனம்

என்றான் தீர்மானமாய்.

அப்படியெனில்

காதல் மட்டுமல்ல

கவிதை,இலக்கியம்

எல்லாம் கூட

ரசாயனம்தானே

என்று யோசித்தபடியே

உறங்கப் போனேன்.

உறக்கத்தின் உள்மடிப்புகளில்

வள்ளுவனைப் பார்த்தேன்.

பாட்டா

பசலைஎல்லாம்

வெறும் பசப்பே.

எல்லாமே ரசாயனமாம் என்றேன்.

பெருமாளுக்காய்

நோன்பிருக்கும்

ஆண்டாளிடம்

போய்ச சொன்னேன்

ஏமாறாதே கோதை

பெருமாள்

என்று தனியாக யாரும்

வைகுண்டத்தில் இல்லை

உன் மூளைக்குள்

இருக்கும்

ஒரு ரசாயனம்தான் அவன்.

பலர் உயிரைவாங்கி

தாஜ்மஹால்

செய்துகொண்டிருந்த

ஷாஜஹானிடம் சொன்னேன்.

மூடராஜா

எதற்கித்தனை செலவு

எல்லாமே ரசாயனம் .

விடிய விடிய

எழுதிக்கொண்டிருக்கும்

காளிதாசனிடமும்

கம்பனிடமும் கூட

சொல்லி வைத்தேன்.

எவரும் கேட்டாரில்லை.

எல்லார் காதையும்

ஏதோ ஒரு ரசாயனம்

இறுக மூடியிருந்தது.

விழிக்கையில்

காய்ச்சல் முற்றி

ஜன்னி வந்து

ஆபத்து அறையில் கிடந்தேன்.

மருத்துவர் வந்து

ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.

காய்ச்சல் இறங்கவில்லை.

கவலைக்கிடம்

என்றார் கிசுகிசுப்பாய்.

மனைவி மக்கள்

சுற்றி நின்று

கண்ணீர் உகுத்தனர்.

ஏன் எனப் புரியவில்லை.

ஒரு

ரசாயனம் இறப்பதற்கு

இன்னொரு ரசாயனம்

அழுவதில்லையே.

Posted ஓகஸ்ட் 7, 2010 by போகன் in கவிதை

காடுறை மரம்   Leave a comment

அடையாளம் இன்மையில்

சலிப்புற்று

கால் உதறி நடந்த

மரத்தை

வியப்புடன் பார்த்தது காடு.

அணைக்க

நீண்ட கிளைகளை

அகற்றி

விடுதலைக் காற்று

உச்சியில் உரச

மகிழ்வாய் நடந்தது

மரம்.

பாலை வாழ்வில்

அதுவரை

மரம அறியா மனிதர்கள்

வழியில் திரியும்

மரத்தை

மலைப்புடன் பார்த்தார்கள்.

மரம் புன்னகைத்தது.

கவனத்தின் வெளிச்சம்

தெரியாத

தன் சகாக்களை

எண்ணி நகைத்தது.

ஆனால்

திகைப்பு தீர்ந்தவுடன்

ஒரு

மரத்தின் உபயோகங்கள்

மனிதர்களின்

மூளைகளில்உதித்தன.

சட்டென்று

அவர்கள் கண்களில்

விரிந்த

வெட்டுக் கத்திகள்

கண்டு நடுங்கிற்று மரம.

விட்டுவந்த

காட்டை எண்ணி

உருகியது.

அதற்குள்

அது

திரும்பும் வழியை

மணல் மூடியிருந்தது.

Posted ஓகஸ்ட் 5, 2010 by போகன் in கவிதை