முடிவல்ல   Leave a comment

இந்தக் கவிதையை

நீங்கள்

படித்துமுடிக்கும்போது

நான்

இறந்து போயிருக்கலாம்.

மணம் வீசுவதில்

சலிப்புற்று

மலர் ஒன்று

உதிர்ந்திருக்கலாம்

கீழ்வானில்

ஒரு

நட்சத்திரம்

ஒளிர்வதில் களைப்புற்று

அணைந்திருக்கலாம்.

அதனால் என்ன…

இவையெல்லாம்

நிகழ்ந்த அதே கணம்

வேறொரு தோட்டத்தில்

வேறொரு அரிதான மலர்

பூத்திருக்கலாம்.

மற்றுமொரு நட்சத்திரம்

யவனத்தின் பிரகாசத்துடன்

மேல்வானில்

மினுங்கத்

தொடங்கியிருக்கலாம்.

இன்னுமொரு இடத்தில்

இன்னுமொரு மனிதன்

இன்னும் சிறந்த

ஒருகவிதையுடன்

பிறந்திருக்கலாம்.

Advertisements

Posted ஓகஸ்ட் 13, 2010 by போகன் in கவிதை

எல்லாம் ரசாயனம்   4 comments

காதலினால்

தாடிக்குள்

தொலைபவனைப் பார்த்து

காதல் என்ற ஒன்றே

கிடையாது

என்றான்

விஞ்ஞானி நண்பன்.

அமர காதல்கள்

அத்தனையுமே

ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்

சுரப்புகளின்றி

வேறல்ல.

எல்லாமே ரசாயனம்

என்றான் தீர்மானமாய்.

அப்படியெனில்

காதல் மட்டுமல்ல

கவிதை,இலக்கியம்

எல்லாம் கூட

ரசாயனம்தானே

என்று யோசித்தபடியே

உறங்கப் போனேன்.

உறக்கத்தின் உள்மடிப்புகளில்

வள்ளுவனைப் பார்த்தேன்.

பாட்டா

பசலைஎல்லாம்

வெறும் பசப்பே.

எல்லாமே ரசாயனமாம் என்றேன்.

பெருமாளுக்காய்

நோன்பிருக்கும்

ஆண்டாளிடம்

போய்ச சொன்னேன்

ஏமாறாதே கோதை

பெருமாள்

என்று தனியாக யாரும்

வைகுண்டத்தில் இல்லை

உன் மூளைக்குள்

இருக்கும்

ஒரு ரசாயனம்தான் அவன்.

பலர் உயிரைவாங்கி

தாஜ்மஹால்

செய்துகொண்டிருந்த

ஷாஜஹானிடம் சொன்னேன்.

மூடராஜா

எதற்கித்தனை செலவு

எல்லாமே ரசாயனம் .

விடிய விடிய

எழுதிக்கொண்டிருக்கும்

காளிதாசனிடமும்

கம்பனிடமும் கூட

சொல்லி வைத்தேன்.

எவரும் கேட்டாரில்லை.

எல்லார் காதையும்

ஏதோ ஒரு ரசாயனம்

இறுக மூடியிருந்தது.

விழிக்கையில்

காய்ச்சல் முற்றி

ஜன்னி வந்து

ஆபத்து அறையில் கிடந்தேன்.

மருத்துவர் வந்து

ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.

காய்ச்சல் இறங்கவில்லை.

கவலைக்கிடம்

என்றார் கிசுகிசுப்பாய்.

மனைவி மக்கள்

சுற்றி நின்று

கண்ணீர் உகுத்தனர்.

ஏன் எனப் புரியவில்லை.

ஒரு

ரசாயனம் இறப்பதற்கு

இன்னொரு ரசாயனம்

அழுவதில்லையே.

Posted ஓகஸ்ட் 7, 2010 by போகன் in கவிதை

காடுறை மரம்   Leave a comment

அடையாளம் இன்மையில்

சலிப்புற்று

கால் உதறி நடந்த

மரத்தை

வியப்புடன் பார்த்தது காடு.

அணைக்க

நீண்ட கிளைகளை

அகற்றி

விடுதலைக் காற்று

உச்சியில் உரச

மகிழ்வாய் நடந்தது

மரம்.

பாலை வாழ்வில்

அதுவரை

மரம அறியா மனிதர்கள்

வழியில் திரியும்

மரத்தை

மலைப்புடன் பார்த்தார்கள்.

மரம் புன்னகைத்தது.

கவனத்தின் வெளிச்சம்

தெரியாத

தன் சகாக்களை

எண்ணி நகைத்தது.

ஆனால்

திகைப்பு தீர்ந்தவுடன்

ஒரு

மரத்தின் உபயோகங்கள்

மனிதர்களின்

மூளைகளில்உதித்தன.

சட்டென்று

அவர்கள் கண்களில்

விரிந்த

வெட்டுக் கத்திகள்

கண்டு நடுங்கிற்று மரம.

விட்டுவந்த

காட்டை எண்ணி

உருகியது.

அதற்குள்

அது

திரும்பும் வழியை

மணல் மூடியிருந்தது.

Posted ஓகஸ்ட் 5, 2010 by போகன் in கவிதை

தொற்று   3 comments

யார் கேட்டாலும்

முத்தம் கொடுக்கத்

தயாராய் இருந்தது குழந்தை ..

யாரும் கேட்கவில்லை முத்தம்

யார் தூக்கினாலும்

தாவி அணைக்க

தயாராய் இருந்தது

யாரும்

தூக்கத் தயாராய் இல்லை.

கை ஊன்றி

நிமிர்ந்து

தன்னைத் தீண்டத்

தயங்கும் மனிதர்களை எப்போதும்

திகைப்புடன் பார்க்கிறது .

அன்னை

தனக்களித்தது

பால் மட்டுமல்ல

என்று அறிய

சற்று காலமாகும் அதற்கு ..

Posted ஓகஸ்ட் 3, 2010 by போகன் in கவிதை

பின்பனிக் காலம்   3 comments

ஒரு

ஆறாவது விரல் போல

மூன்றாவது சிறகு போல

அசவுகர்யமாய்

முளைத்துவிட்டது இக்காதல்

நில் என அதட்டியும்

சொல் கேளாப் பிள்ளையாய்

மனம் இறங்கி

அவளோடு நின்றது

இனி

இரண்டு வழிகளே உள்ளன

சமூகத்தின் கோடுகள்

அழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு

இக்காதலை

நட்பெனப் பெயர்மாற்றி

ஸ்வரமற்ற பாடலாக

காகித மலராக

அழுத்திச் சுருக்கிவிடலாம்

அல்லது

நீந்தித் தீராத

காமப் பெருங்கடலில்

கரைத்து விடலாம்

மீசை வெளுக்கும்

இவ்வயதில்

காதலை

காதலாகவே

வைத்திருப்பது

ஏனோ

கடினமாகப் போயிற்று

Posted ஓகஸ்ட் 1, 2010 by போகன் in கவிதை

திரும்பி வா   Leave a comment

பகிர மறுத்த

அத்தனை பொம்மைகளையும்

இப்போது

தர சித்தமாய்

ஜன்னலிலேயே

காத்திருக்கும் குழந்தை…

முன்தினம்

காலத்தில்

உறைந்து போன

தன்

சகோதரனுக்காய்…

Posted ஜூலை 23, 2010 by போகன் in கவிதை

காதல் போயின் ..   2 comments

காதல்

போனால் என்ன

அதற்கு பிறகும்

ஒரு

வாழ்க்கை இருக்கிறது

என்றாள் தோழி.

சிறகுகள்

உதிர்ந்தபிறகும்

சில

பட்டாம்பூச்சிகள்

சீவித்திருக்கும்.

ஆனால்

அவற்றை

புழு

என்றே சொல்வார்கள்.

Posted ஜூலை 20, 2010 by போகன் in கவிதை